நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை நாடியுள்ள போதும்,சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நடவடிக்கைகளும் இது வரை கைகூடவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்திற்காண இரு முக்கிய பாதைகளான மன்னார்-மதவாச்சி பிரதான பாதை மற்றும் மன்னார் யாழ்ப்பாணம் பிரதான பாதை ஆகியவை வெள்ள நீர் காரணமாக போக்கு வரத்துக்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்ற முடியாத நிலையும் காணப்படுகின்றது.
தற்போது பெய்து வருகின்ற மழை மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து குளங்களின் மேலதிக நீர் ஆகியவை பெருக்கெடுத்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை தனித்து விட்டுள்ளது.
இதன் காரணமாக கூராய் மற்றும் குஞ்சுக்குளம் போன்ற பகுதிகளில் பல மக்கள் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கூறி இருக்கின்றார்கள்.
அவர்களை படகு மூலம் அழைத்துச் செல்வதற்கு அதிக அளவான நீர் ஓட்டம் காரணமாக குறித்த நடவடிக்கை மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
தற்போது நீடித்துள்ள வானிலை மாற்றம் காரணமாக விமானப்படையின் உதவியும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளும் கை கூடவில்லை.
இரண்டு தடவைகள் முயற்சி செய்து தற்போது வவுனியாவில் வானுர்தி தறித்து நிற்கின்றது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலே முப்படையினர் பொலிஸாருடன் இணைந்து உரிய திணைக்களத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 24 ஆயிரத்து 331 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் அசாதாரண கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை விட 3 ஆயிரத்து 795 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 873 நபர்கள் 61 பாதுகாப்பு மையங்களிலே தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே மக்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்களினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின் பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் அதிகாரிகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் மற்றும் அரச சார்பாற்ற அமைப்புக்களின் உதவியுடன் உலர் உணவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.















