தற்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பாரியளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள், வெள்ளத்தின் பின்னரான மீள் எழுச்சி செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அராங்க அதிபர் .அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 7581 குடும்பங்களைச் சேர்ந்த 23789 பேர் தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்னும் தரவுகள் திரட்டப்படுகின்றமையினால் இதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
மேலும் 9 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் 45 ஆயிரம் ஏக்கர் வயல்நிலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
1500 கால்நடைகள் காணாமல் போயுள்ளது இவற்றில் இறப்புக்கள் இன்னும் துல்லியமாக கணக்கெடுக்கப்படவில்லை இது சார்ந்து தரவுகள் திரட்டப்படுகின்றன.
பாரிய அளவில் கால்வாய்கள் பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன் கடலரிப்பும் அதிகரித்துள்ளது.
வெள்ளத்தினால் முல்லைத்தீவு நகர வீதிகள் மற்றும் ஏனைய வீதிகள் மாசடைந்துள்ளது.
இவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த பணியினை செய்ய இராணுவத்தினரும் தயார்நிலையில் உள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதேச சபையின் பணிகள், மின்சாரசபையின் பணிகள் தேவைகள் மற்றும் தடைப்பட்ட மின்சாரத்தினை விரைவாக வழங்குதல், சேதமடைந்த வீதிகள் பாலங்கள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ள வேலைகள், போக்குவரத்து வசதி ஏற்பாடுகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விரைவாக வழங்கப்படவேண்டிய குடிநீர் மற்றும் அதனுடன் இணைந்த இதர தேவைகள் தொடர்பிலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ச.மஞ்சுளாதேவி (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .சி.ஜெயக்காந்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர், கால்நடை சுதேச வைத்திய அதிகாரி, பிரதேச சபையின் செயலாளர்கள், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.














