அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது.
மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிவித்துள்ளது.
2025 – 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் : உலக பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது எனவும் அதனால், இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது, அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அங்கமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தியாவின் வளர்ச்சியையும், தொழில்நுட்ப திறன்களையும், மிகச்சிறந்த சக்தியாக அமெரிக்கா மதிப்பிடுகிறது எனவும் இந்தோ – பசுபிக் பகுதியில் சீனாவின் விரிவாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது, அந்த பகுதியின் பாதுகாப்பு அமைப்பில் முக்கியத் தூணாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ராணுவப் பயிற்சிகள், கடல் பாதுகாப்பு கண்காணிப்பு, புதிய தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்புக் கருவிகள் மேம்பாடும் அதிகரிக்க உள்ளன.
ஆயுதத் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா – அமெரிக்கா கூட்டணி பலமாக மாற உள்ளததுடன் எதிர்கால பாதுகாப்பு சவால்களை சமாளிக்க, இணைந்த செயல் திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசு முறை பயணமாக இந்தியா வந்து சென்றுள்ள நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













