ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:15 மணிக்கு (14:15 GMT) அமோரி பிராந்தியத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் 50 கி.மீ (31 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, எனினும் செவ்வாய்க்கிழமை (09) காலை ஜப்பான் அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் நீக்கியது.
அதே நேரத்தில், நாட்டின் சில பகுதிகளில் 70 சென்டி மீட்டர் (27 அங்குலம்) உயரம் வரை அலைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் விளைவாக சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மேலும் வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் – அதனால் குறைந்தது ஒரு வாரமாவது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின்படி, நிலநடுக்கத்தின் பின்னர் சுமார் 90,000 குடியிருப்பாளர்களுக்கு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 2,700 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமோரி மாகாண அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜப்பான் ரயில்வே வடகிழக்கு கடற்கரையில் சில சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கம் பிரதமரின் நெருக்கடி மேலாண்மை மையத்திற்குள் ஒரு பதிலளிப்பு அலுவலகத்தை அமைத்து அவசரகால குழுவை கூட்டியுள்ளதாக தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, ஜப்பானிய மின்சார நிறுவனமான டோஹோகு எலக்ட்ரிக் பவர், நிலநடுக்கத்தின் விளைவாக அதன் ஹிகாஷிடோரி மற்றும் ஒனகாவா அணு மின் நிலையங்களில் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என்று கூறியது.
செயலிழந்த ஃபுகுஷிமா அணு மின் நிலைய தளத்திலும் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
2011 மார்ச் 11 அன்று நாட்டின் கிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஃபுகுஷிமா சேதமடைந்தது.
ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த அந்த நிலநடுக்கம், ஹோன்ஷுவின் பிரதான தீவில் சுனாமியைத் தூண்டியது.
18,000 க்கும் மேற்பட்ட மக்களைக் காவு கொண்டது மற்றும் முழு நகரங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஜப்பான் உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும்.
நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள இந்நாடு, வருடத்திற்கு சுமார் 1,500 நிலநடுக்கங்களை சந்திக்கின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜப்பானின் நிலநடுக்க விசாரணைக் குழு, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட 60-90% வாய்ப்பு இருப்பதாகக் கூறியது.
மோசமான சூழ்நிலைகள் அது டிரில்லியன் கணக்கான சேதத்தை ஏற்படுத்தும் என்றும், இலட்சக்கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்றும் கூறுகின்றன.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டு கிடக்கும் நில அதிர்வு நடவடிக்கைப் பகுதியான நாங்காய் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழி வகுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














