அனர்த்தத்தின் பின்னரான காலத்தில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது உதவி வழங்குவதைத் தாண்டிய ஒரு அசாதாரணமான பொறுப்பைக் கொண்டுள்ளது.
அப்பொறுப்பானது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் (விசேடமாக பெண்களும் சிறுவர்களும்) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதுமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமையில் அமைச்சின் தொடர்ச்சியான இடையீடுகளை மீளாய்வு செய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர், கலாநிதி நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் கூட்டப்பட்ட பிரிவுத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் அமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எமது அமைச்சின் கீழ், பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலமான உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்தற் சேவை உள்ளது.
இந்தச் சமூகங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான மனரீதியான தயார்நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் இவ் ஆற்றுப்படுத்தற்சேவையானது அதிகபட்சம் செயற்பட வேண்டும்.
முன்னர் தமது வீடுகளில் தமது குடும்பங்களின் பாதுகாப்பில் வாழ்ந்த சிறுவர்கள் இப்போது அந்தப் பாதுகாப்பான இடத்தை இழந்திருக்கலாம். தமது கணவன்மார்களுடன் வாழ்ந்த பெண்கள் தமது துணையை இழந்திருக்கலாம். வரும் நாட்களில், சரியான பாதுகாவலர் அற்ற சிறுவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மற்றும் தமது தாயை இழந்து இப்போது தமது தந்தையின் தனிக் கண்காணிப்பில் இருக்கும் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் போன்றோரை நாம் இப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சந்திக்க நேரிடலாம். எனவே, நாம் இவ்வாறான பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாகாண நன்னடத்தை திணைக்களங்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். கள உத்தியோகத்தர்கள் ஏற்கனவே மிகச்சிறந்த அளவில் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இத்தருணத்தில், அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பால், அவர்கள் தமது மாவட்டங்களிலும், பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் துறை வேறுபாடின்றி அயராது செயற்படவேண்டியுள்ளது. நாம் இதனை மதிப்பீடு செய்து, எமது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தமது பணிச்சுமையினை உரியவாறு பகிர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்க வேண்டும்.
இதற்கிடையில், அவர்களின் சுகாதார நிலைமைகளையும், அவர்களின் சொந்தக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் அனர்த்த நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தருணத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்தையும் உத்தியோகபூர்வ கடமையாக மட்டுமின்றி, தேசிய மற்றும் சிவில் பொறுப்பாகவும் கருத வேண்டும்.
இதேவேளை, மேற்கொள்ளப்படுகின்ற நலன்புரி நடவடிக்கைகள், தரவு சேகரிப்பு முயற்சிகள், மற்றும் விசேட சூழ்நிலைகளின் முகாமைத்துவம் ஆகியவை எந்தளவிற்கு முன்னேறியிருக்கின்றன என்பதை பிரிவுத் தலைவர்கள் இதன்போது முன்வைத்தனர்.
இம்முயற்சிகளை மேலும் பரந்தளவிலானதாகவும், அதிக செயற்திறன் மிக்க செயன்முறையாகவும் மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் காரணிகளை அடையாளம் காண்பது குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை ஆராய்வது குறித்தும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மற்றும் அமைச்சினதும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களினதும் பிரிவுத் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.















