வெனிசுலா கடற் பகுதியில் ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) தெரிவித்தார்.
இது வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் கடும் அழுத்தத்தினை எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வெனிசுலா கடற்கரையில் ஒரு டேங்கரை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் – இது ஒரு ஒரு பெரிய டேங்கர், இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது என்று கூறினார்.
எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட அமெரிக்க சட்டமா அதிபர் பாம் போண்டி, அந்தக் கப்பல் வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து அனுமதிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மசகு எண்ணெய் டேங்கர் என்று விவரித்தார்.
இந்த நடவடிக்கையை “சர்வதேச கடற்கொள்ளையர்” செயல் என்று கூறி, வெனிசுலா உடனடியாகக் கண்டனம் செய்தது.
வெனிசுலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது.
மேலும் அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மதுரோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் சிலவற்றைக் கொண்ட வெனிசுலா, வொஷிங்டன் அதன் எண்ணெயை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் எண்ணெய் டேங்கர் பறிமுதல் செய்தி குறுகிய கால விநியோக கவலைகளைத் தூண்டியதால் புதன்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலைகள் 27 காசுகள் அல்லது 0.4% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $62.21 ஆக உயர்ந்தன.
அதே நேரத்தில் அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் எதிர்கால விலைகள் 21 காசுகள் அல்லது 0.4% அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு $58.46 ஆக அதிகரித்தன.
இந்த நடவடிக்கை கப்பல் மூலமான ஏற்றுமதி வர்த்தகத்தை அச்சுறுத்தும் என்றும் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் சீர்குலைக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
டேங்கர் பறிமுதல் தொடர்பாக அமெரிக்க சட்டமா அதிபர் பகிர்ந்து கொண்ட காட்சிகளில், ஒரு பெரிய கப்பலின் மீது ஒரு இராணுவ ஹெலிகொப்டர் வட்டமிடுவதையும், படையினர் கயிறுகளைப் பயன்படுத்தி தளத்திற்கு இறங்குவதையும் வெளிக்காட்டியது.
சீருடை அணிந்த வீரர்கள் துப்பாக்கிகளுடன் கப்பலில் நகர்வதையும் காட்சியில் காண முடிந்தது.
டேங்கர் பறிமுதல் பற்றிய அறிக்கைகளைப் பற்றி பேசாமல், புதன்கிழமை ஒரு இராணுவப் போரை நினைவுகூரும் அணிவகுப்பில் மதுரோ பேசினார்.
உலகில் அதிகளவில் மசகு எண்ணெய் எற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் வெனிசுலாவும் ஒன்றாகும்.
கடந்த மாதம் வெனிசுலா ஒரு நாளைக்கு 900,000 பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை ஏற்றுமதி செய்தது, இந்த ஆண்டு இதுவரையிலான மூன்றாவது அதிகபட்ச மாதாந்திர சராசரி இதுவாகும்.












