கடந்த 50 ஆண்டுகளாக தவறாக அரசியல் வாதிகளினால் வழி நடத்தப்பட்ட மக்களை ஒரேயொரு உத்தரவின் மூலம் ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாவே நாட்டில் பாரிய அழிவு ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில்வே பாதைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியிலுள்ள உலபனே நகருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பேரழிவால் நாவலப்பிட்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் பாரிய அழிவை சந்தித்துள்ளன.
உண்மையில், நாவலப்பிட்டி மக்கள், முப்படைகள், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்றனர்.
நாவலப்பிட்டி நகரத்திலிருந்து கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது.
இங்கு ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியும் சேதமடைந்துள்ளது, மேலும் சுமார் 200 மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையம் சேதமடைந்துள்ளது.
சுமார் 100 மீட்டர் நீளமுள்ள ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
தீவிர முயற்சிகளின் விளைவாக, அடுத்த 2-3 நாட்களுக்குள், பிரதான வீதிய போக்குவரத்திற்காக திறக்க முடியும் .
தற்போது, 750 மீட்டர் தூரம் பேருந்தில் சென்று, மறுபுறம் நடந்து செல்வேண்டியுள்ளது.
இவ்வளவு அழிவு ஏற்படுவதற்கு காரணம், வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் மதகுகளை மறித்து சில கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன .
இதுபோன்ற கட்டுமானங்கள் செய்யப்பட்ட இடத்திலும் நாம் தற்போது இருக்கிறோம்.
எனவே நாம் சட்விரோத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம்.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக ஒரு தவறான அமைப்பின் கீழ் மக்கள் பழக்கப்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன.
ஒரே உத்தரவின் மூலம் அவற்றை ஒரே நேரத்தில் எம்மால் மாற்ற முடியாது.
எனவே, இதுபோன்ற விஷயங்கள் நடக்க அனுமதிக்காமல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு முறையாக அழைத்துச் செல்ல புதியவற்றை உருவாக்குவதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம்.
கொத்மலை நீர்த்தேக்க அணையைத் தாமதமாக திறந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
அவ்வாறு குறிப்பிடுபவர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகின்றேன்.
எதிர்க்கட்சிகள் தற்போது மக்களின் செல்வாக்கினை இழந்துள்ளனர்.
புயல் காரணமாக மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டதை விடவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.
பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.














