அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட தனது அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே (Naden Cooray) மற்றும் நிதேஷ் சாமுவேல் (Nitesh Samuel) ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இவர்கள் உலகக் கிண்ணத்துக்கான இளையோர் அவுஸ்திரேலிய அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் தவிர, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 வீரர்களும் (ஆர்யன் சர்மா மற்றும் ஜோன் ஜேம்ஸ்) மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் லீ யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலியா நடப்பு சாம்பியன்களாகப் போட்டியில் நுழைகிறது.
ஆலிவர் பீக் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் டிம் நீல்சன் தலைமை தாங்குவார், லூக் பட்டர்வொர்த் மற்றும் டிராவிஸ் டீன் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயற்படுகின்றனர்.
தொடரில் அவுஸ்திரேலியா குழு A இல் அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் பெப்ரவரி 06 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வேயில் போட்டிகள் நடைபெறும்.
போட்டி வடிவத்தில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும்.
அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
தொடருக்காக அவுஸ்திரேலிய அணி, ஜனவரி தொடக்கத்தில் நமீபியாவுக்கு சென்று ஜனவரி 9–14 வரை பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
அணியில் இடம் பெற்றுள்ள மூன்று புதிய வீரர்களான நிதேஷ் சாமுவேல், நாடன் கூரே மற்றும் வில்லியம் டெய்லர் ஆகியோர் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் – மூவரும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேரந்தவர்கள் ஆவர்.
பெர்த்தில் நடந்த தேசிய U-19 சாம்பியன்ஷிப்பில் சாமுவேல் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக இருந்தார்.
அங்கு அவர் 91 சராசரியில் 364 ஓட்டங்களை எடுத்ததுடன், தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.


















