இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த மிகப்பெரிய செயல்பாட்டு சரிவுக்குப் பின்னால் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என்று அடையாளம் காணப்பட்ட பின்னர், செயல்பாடுகளை மீட்டெடுப்பது மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து விசாரிக்க விமான ஒழுங்குமுறை ஆணையகம் இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸை அழைத்த நாளில் இந்த பணிநீக்கம் வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்கு இந்த நான்கு செயல்பாட்டு ஆய்வாளர்களும் நேரடியாகப் பொறுப்பேற்றனர்.
செயல்பாட்டு இணக்கம் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணியை விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
கடந்த வாரம் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டு, இலட்சக்கணக்கான பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்திய இண்டிகோ விமான நிறுவன நெருக்கடிக்கான மூல காரணங்களை அடையாளம் காணும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், பணிநீக்கங்களுக்குப் பின்னால் எந்த விரிவான காரணத்தையும் DGCA தெரிவிக்கவில்லை.
இண்டிகோவின் உள்நாட்டு சந்தைப் பங்கு கிட்டத்தட்ட 65% ஆக இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இதற்கிடையில், விமான சேவை இரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை விமான நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து கண்காணிக்க DGCA தொடங்கியுள்ளது.
விமான நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் மேற்பார்வை அதிகரித்து வருவதால், DGCA அதிகாரிகள் தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை உறுதிப்படுத்த முயற்சிப்பதால், அதன் விமானங்களில் 10% குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டதன் பின்னணியில் இது வந்துள்ளது.
டிசம்பர் 5 ஆம் திகதி 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டபோது இரத்து செய்யப்பட்ட எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.
நெருக்கடியின் பின்னணியில் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த திருத்தப்பட்ட பணியாளர் ஓய்வு மற்றும் பணி விதிமுறைகள் (விமான கடமை நேர வரம்பு விதிகள்) உள்ளன.
ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறையால் தவிக்கும் இண்டிகோ, புதிய விதிமுறைகளின்படி பணியாளர் பட்டியலை மறுசீரமைக்க போராடியது.
இருப்பினும், இந்த நெருக்கடி புதிய விதிகளைத் திரும்பப் பெற அரசாங்கத்தை வேண்டுமென்றே திசைதிருப்பும் முயற்சி என்று பல நிபுணர்கள் கூறியுள்ளனர்.















