விலை நிர்ணயம் குறித்த கால்பந்து ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் 104 போட்டிகளுக்கும் மிகவும் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை ஃபிஃபா (FIFA) அறிவித்துள்ளது.
அதன்படி, ஃபிஃபா செவ்வாயன்று (16) ஒவ்வொரு போட்டிக்கும் சம்பந்தப்பட்ட அணிகளின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு புதிய வரிசை டிக்கெட்டுகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது.
இதற்கு அமைவாக, இறுதிப் போட்டி உட்பட சீசனின் ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக் விலை அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்காக (கனடா, மெக்சிகோ, அமெரிக்கா) டிக்கெட்டுகளின் ஆரம்ப விலைகள் மிக அதிகமாக இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழும்பியது.
இந்த எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஃபிஃபா புதிய சலுகை விலையிலான டிக்கெட் பிரிவை அறிவித்தது.
எனினும், இந்த டிக்கெட்டுகள், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்ற தேசிய அணிகளின் விசுவாசமான ஆதரவாளர்களுக்காக (Loyal Fans) மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்படுகின்றன.
டிக்கெட் விநியோகத்தையும், அதற்கான தகுதி அளவுகோலையும் தனித்தனியாக அந்தந்த நாடுகளின் உறுப்பினர் சங்கம் (Participating Member Associations – PMAs) நிர்வகிக்கும்.

















