குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருட்கள் மொத்த மதிப்பு சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, பத்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட 10 கிலோகிராம் 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோகிராம் 912 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டன.
இவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பயணிகளும் போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முன்னதாக பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடையவர் என்றும், அவர் இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 8 பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் 220 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விமானப் பயணியையும் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.














