மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.
ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சினால் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர காலங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் அனுப்பப்படும் என்றும், சைரன் ஒலிகள் கேட்டால் தமக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளில் தஞ்சம் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தூதரகம் இன்று (31) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும் என்றும், இக்காலப்பகுதியில் வழமையான தூதரகப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.














