உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து மூன்று சகோதரிகள் இன்று (04) அதிகாலை 2.15 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு முன்னர் அவர்கள் “மன்னிக்கவும் அப்பா” என்று கையால் எழுதப்பட்ட குறிப்பை எழுதி வைத்துவிட்டு குதித்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பக்கி (12), பிராச்சி (14), மற்றும் விசிகா (16) ஆகிய மூன்று சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சகோதரிகள் கணிசமான நேரத்தை மொபைல் போன்களில் செலவழித்து வந்ததாகவும், கொரிய ஆன்லைன் பணி சார்ந்த கேமிங் செயலிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் தந்தை கூறுகையில், தனது மகள்கள் பணி சார்ந்த விளையாட்டை விளையாடுவது தனக்குத் தெரியாது என்றும், விசாரணையின் போது தடயவியல் நிபுணர்கள் அதைப் பற்றித் தெரிவித்ததாகவும் கூறினார்.
சம்பவத்தின் பின்னர் குறித்த குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறுமிகளால் பெற்றோருக்கு எழுதப்பட்ட ஒரு பக்க தற்கொலைக் குறிப்பை பொலிஸார் மீட்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக அந்தக் குறிப்பை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், ஆன்லைன் கேமிங் செயலிக்கு அடிமையாகியதாகக் கூறப்படுவது உட்பட பல்வேறு கோணங்களில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.















