பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதில்லை என்ற முடிவை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மூன்று நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, ஒரு இணக்கமான தீர்வை ஆராய, PCB உறுப்பினர்கள், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல்லுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (08) லாகூரில் ஐசிசி தூதுக்குழுவைச் சந்தித்தனர்.
உலகப் போட்டிகளில் இந்தியாவைப் புறக்கணிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமானால், PCB ஐசிசியிடம் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐசிசியிடம் பாகிஸ்தான் முன்வைத்த மூன்று நிபந்தனைகள்:
- ஐ.சி.சி வருவாயில் அதிகரித்த பங்கு
- இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட்டை மீட்டெடுப்பது.
- கைகுலுக்கும் நெறிமுறையை மீண்டும் அமுல்படுத்துதல்
நடுநிலையான இடத்தில் போட்டி திட்டமிடப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட அனுமதிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்தபோது சர்ச்சை தொடங்கியது.
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் தங்கள் பரம எதிரிகளை புறக்கணித்ததற்கான காரணங்களை தெளிவாகக் கூறவில்லை.
கிரிக்கெட் உலகில் நிலவும் அனுமானம் என்னவென்றால், பாகிஸ்தானின் நிலைப்பாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்ததைத் தொடர்ந்து, போட்டியில் இருந்து விலகிய பங்களாதேஷுடனான ஒற்றுமையின் செயல் என்பதாகும்.
















