டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, அன்ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார். அவர் கூறும்போது, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்கையை தயாரித்து உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த வழக்கில் உதவ உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நப்பினை கூறும்போது, “சந்தேகத்துக்குரிய வங்கி பணப் பரிமாற்றங்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார்.
இறுதியில் தலைமை நீதிபதி அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 ஏப்ரல் முதல் 2025 நவம்பர் வரை நாடு முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் அப்பாவி பொதுமக்கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இது மிகப்பெரிய கொள்ளை ஆகும். இந்த தொகை பல்வேறு மாநிலங்களின் பட்ஜெட்டுக்கு இணையாக உள்ளது.
பெரும்பாலான டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு வங்கி அதிகாரிகளின் அலட்சிய போக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொதுமக்களின் பணத்துக்கு வங்கிகளே பாதுகாவலர்கள். வங்கிகளை நம்பியே பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
பொதுவாக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஒரு மாதத்தில் சுமார் ரூ.20,000 மட்டுமே பணத்தை எடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் எடுக்கப்படுவதை வங்கி நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை தகவல்களை அனுப்ப வேண்டும்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் ஆலோசிக்க வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த 4 வாரங்களுக்குள் வழிகாட்டு நெறிகளை வரையறுக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஒப்புதல் வழங்குமாறு டெல்லி, குஜராத் அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியது.
















