பிரித்தானியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஜனாதிபதியின் அரசமுறைப் பயணம் லண்டனில் தொடங்கியுள்ளது.
நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு (Bola Ahmed Tinubu) மற்றும் அவரது மனைவி ஒலுரேமி (Oluremi Tinubu) ஆகியோரை விண்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்ட நைஜீரியாவுடன் வர்த்தகம், நிதிச் சேவை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய பொருளாதாரக் கூட்டாண்மையை உருவாக்குவதே இந்த 2 நாள் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜனாதிபதி Tinubu, ரமலான் நோன்பு நோற்றுள்ளதால், வழக்கமாக மன்னர் அளிக்கும் மதிய விருந்து தவிர்க்கப்பட்டு, இரவு நேர அரச விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஜனாதிபதி, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் கல்லறையில் ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













