வழக்கமான அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இஷான் கிஷன் இடைக்கால தலைவராக வழிநடத்தவுள்ளார்.
அதேநேரம், துணைத் தலைவராக அபிஷேக் ஷர்மாவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் நியமித்தது.
கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்தக் காயம் காரணமாக கம்மின்ஸ் விளையாடாமல் அண்மைய நாட்களில் ஓய்வில் உள்ளார்.
இதே காயம் காரணமாகவே அவர் அண்மையில் அஸ்திரேலியாவில் நடந்த ‘தி ஆஷஸ்’ தொடர் மற்றும் டி20 உலகக் கிண்ணத்தின் கணிசமான பகுதியிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளில் விளையாட மாட்டார்.
அவர் குணமடையும் வரை, இஷான் கிஷன் தலைவராகவும், அபிஷேக் சர்மா துணை தலைவராகவும் செயற்படுவார்கள் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் புதன்கிழமை (18) தெரிவித்துள்ளது.
எனினும் கம்மின்ஸ் எத்தனை போட்டிகளைத் தவறவிடுவார் என்பதை 2016 ஐ.பி.எல். பட்டத்தை வென்ற அணி தெரிவிக்கவில்லை.
அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து இஷான் கிஷன் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடது கை துடுப்பாட்ட வீரர், நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி கிண்ணத்தை வென்றதில் முக்கியப் பங்காற்றினார்.
ஒன்பது போட்டிகளில் 199.37 ஸ்டிரைக் ரேட்டில் 317 ஓட்டங்கள் குவித்து, அதிக ஓட்டங்களை எடுத்தவர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
அவர் தொடரில் 80.25 சராசரியுடன் மூன்று அரை சதங்களையும் அடித்தார்.
இந்த சீசனின் தொடக்கத்தில், இஷான் கிஷான் தலைவராக இருந்து ஜார்கண்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்தி, சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் அதன் முதல் பட்டத்தை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.















