நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அந்த விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி இருக்கவில்லை. அத்துடன் குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை.
இதேவேளை அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கும் நோயாளர் காவு வண்டி இருக்கவில்லை. இதனால் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எமது வைத்தியசாலையில் பெரிய பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லை.
கிளினிக் வசதி இருந்தாலும், இரண்டு வைத்தியர்களே கடமையில் இருப்பதால் மக்கள் பி.ப 5.00 மணிவரை காத்திருந்து சேவையை பெறவேண்டிய தேவை உள்ளது. தாதியர் இருந்தால்கூட சில சேவைகளை பெற முடியும். ஆனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு தாதியர் கூட இல்லை.
நாய் கடிக்கு இலக்கானவர்கள் முதலாவது ஊசியை வைத்தியசாலையில் பெற்றுவிட்டு அடுத்த ஊசிக்காக வரும்போது சங்கானை அல்லது காரைநகர் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு ஊசியை போடுவதற்கு வந்தால் கூட அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இரவு வேளையில் வைத்தியசாலைக்கு வந்தால் வைத்தியர் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் தர முடியாது என்று சொல்கிறார்கள். பி.ப 6.00 மணிக்கு பின்னர் வைத்தியசாலை பூட்டப்பட்டிருக்கும். அவசிய சுகாதார சேவைகளை பெறுவதற்கு வரும்போது வைத்தியசாலை பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய விடயம். ஆகவே எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.












