கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் குறிப்பிட்டார்.
இந்த சோதனைகளின் போது 47,006 லிட்டர் டீசல், 2,668 லிட்டர் பெற்றோல் மற்றும் 2,706 லிட்டர் மண்ணெண்ணெய் உட்பட 52,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
தொடர்ந்து நிலவி வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத எரிபொருள் பதுக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.












