பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹெராவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுசரணை வழங்குவது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 76 ஆவது எசல பெரஹெரா, ஜூலை 25 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.
கண்டி தலதா பெரஹெராவிற்கு அடுத்ததாக, இந்நாட்டில் நடைபெறும் பிரதான பெரஹெராக்களில் முதன்மையான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் எசல மஹா பெரஹெராவை, இம்முறையும் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதன்படி, திறைசேரியின் அனுமதியுடன் பொதுநம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை, தேசிய லொத்தர் சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், துறைமுக அதிகாரசபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. பெல்லன்வில தம்மரதன தேரர், விகாராதிகாரி வண. பெல்லன்வில சங்கரதன தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெல்லன்வில ரஜமஹா விகாரை பெரஹெரா குழுவின் தலைவர் எச். டி. பிரேமசிறி, செயலாளர் கேசரலால் குணசேகர, பொருளாளர் கிங்ஸ்லி குமார, கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் சாமர மத்துமகலுகே, பொரலஸ்கமுவ நகர சபையின் தவிசாளர் நிஷாந்த வெதமுல்ல ஆகியோரும், அனுசரணை வழங்கும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.













