ஹான்டா வைரஸ் (Hantavirus) அச்சுறுத்தலுக்குள்ளான சுற்றுலா கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்தானிய பயணிகள், தற்போது இங்கிலாந்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹான்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 20 பிரித்தானியர்கள், 45 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டெனெரிஃபே (Tenerife) தீவில் இருந்து விசேட விமானம் மூலம் மான்செஸ்டர் விமான நிலையம் வந்தடைந்த இவர்கள், உடனடியாக மெர்சிசைடில் உள்ள அரோ பார்க் (Arrowe Park) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் 72 மணி நேரம் தங்கியிருந்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்.
இதேவேளை, மருத்துவமனை கண்காணிப்புக்குப் பின்னர் , அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் சென்று மேலும் 42 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவலால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இருவருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு இருந்ததை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மேலும் இரண்டு பிரித்தானியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவருக்கும், நெப்ராஸ்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க-பிரித்தானிய இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் ஆரம்பகட்டப் பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகப் பரவலைத் தவிர்க்கப் பிரித்தானிய அரசு இந்தத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.













