பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி ஆகியோர் அடுத்த மாதம் ஒரு இருதரப்பு சந்திப்பை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் ஸ்டார்மர் நேற்று மாலை ஜான் ஸ்வினியைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தபோது இந்தச் சந்திப்பிற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடனே, அதன் நோக்கம் குறித்து இரு தரப்பினரிடையே முரண்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஸ்காட்லாந்து சுதந்திரத்தையோ அல்லது மற்றுமொரு பொது வாக்கெடுப்பையோ தனது அரசாங்கம் ஆதரிக்காது என்பதைப் பிரதமர் ஸ்டார்மர் இந்த உரையாடலின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் பேசுகையில், தனது பதவிக்காலத்தில் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்தச் சந்திப்பு ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், ‘சுதந்திர வாக்கெடுப்பு’ என்ற விவகாரத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவுவது உறுதியாகியுள்ளது.














