இணையவழி மோசடி மையங்களில் பணிபுரியுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் தடுத்து வைப்பவர்கள் அல்லது வன்முறையாக நிர்ப்பந்திப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் வியாழக்கிழமை (மே 14) அன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடாக விளங்கும் மியான்மரில் இணைய மோசடி மையங்கள் பெருகியுள்ளன.
அவை, காதல் மற்றும் கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பான மோசடிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள இணையப் பயனர்களைக் குறிவைக்கின்றன.
பல பில்லியன் டொலர் மதிப்புள்ள கள்ளச் சந்தை, விருப்பமுள்ள பல ஊழியர்களை ஈர்க்கிறது.
ஆனால் நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினர் மியன்மாரில் உள்ள இடங்களுக்குக் கடத்தப்பட்டு, மோசடி மைய நடத்துனர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தின்படி, இணையவழி மோசடிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தும் நோக்கில், ஒவருக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை, சித்திரவதை, சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக்காவல் அல்லது கொடூரமான நடத்தை ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும்.
இணையவழி மோசடி தடுப்பு சட்டமூலத்தில் இணையவழி மோசடி மையத்தை நடத்துபவர்கள் மற்றும் டிஜிட்டல் நாணய மோசடிகளை (கிரிப்டோ மோசடிகள்) செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் அம்சமும் அடங்கியுள்ளது.














