பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன.
தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர்.
இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது.
இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர்.
பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர்.
இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.














