நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து நட்சத்திரம் ஜேக்கப் பெத்தேல், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜூன் 4 அன்று நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில், பவுண்டரியைத் தடுக்க டைவ் அடித்தபோது பெத்தேலின் இடது கை விரல் காயமடைந்தது.
இதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் இறுதி குழு நிலைப் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெத்தேல் தாயகம் திரும்புவது தொடர்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், லோர்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் அவர் பங்கேற்பாரா என்பதைத் தீர்மானிக்க, இங்கிலாந்தின் மருத்துவக் குழுவால் அவர் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்றிரவு (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இங்கிலாந்தின் அண்மைய டெஸ்ட் இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை அடித்த பெத்தேல் நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏழு இன்னிங்ஸ்களில் 96 ஓட்டங்களே மட்டுமே எடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி லோரட்ஸில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது போட்டி ஜூன் 17 அன்று கென்னிங்டன் ஓவல் மைதானத்திலும், மூன்றாவது போட்டி ஜூன் 25 அன்று நாட்டிங்ஹாம் மைதானத்திலும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















