வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு, மீகொடை சந்தி அருகே அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் (தன்சல்) வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள், ஹங்வெல்ல, அவிசாவளை மற்றும் பிலியந்தல பகுதிகளைச் சேர்ந்த 38, 35, 32, 15, 56 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும், இரண்டு பெண்களும் மற்றும் பாடசாலை செல்லும் வயதுடைய ஒரு சிறுமியும் அடங்குவர்.
விபத்தினை ஏற்படுத்திய வாடகைக் கார், அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததுடன், விபத்தினை ஏற்படுத்திய போதிலும் நிற்காமல் சென்றுகொண்டிருந்தது.
விபத்து தொடர்பாக 119 எண்ணுக்குப் பின்னர் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கொடகம சந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நகர பொலிஸ் அதிகாரிகள், அந்த வாடகைக் காரை தடுத்து நிறுத்தியதுடன், அதன் சாரதியையும் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய கார் சாரதி பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், விபத்து நடந்தபோது அவர் மதுபோதையில் இருந்தாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த 7 பேர் ஹோமகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகைள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













