வேல்ஸ் நாட்டில் இரண்டு வயதுடைய குழந்தைகளுக்குக் குழந்தை பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, நடப்பு ஆண்டில் கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் (£55m) செலவிடப்படும் எனப் புதிய வேல்ஸ் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுப் பொறுப்பேற்ற ‘பிளாய்ட் கிம்ரு’ (Plaid Cymru) கட்சி, தனது முதன்மை வாக்குறுதியான ‘9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான இலவச பராமரிப்புத் திட்டத்தை’ அறிவித்த நிலையில் எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்பதை விளக்க வேண்டும் எனப் பலத்த அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வந்தது.
தற்போது எழுந்துள்ள கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரண்டு வயதுடைய மேலும் 3,300 குழந்தைகளுக்கு வாரத்திற்கு 12.5 மணிநேரக் குழந்தை பராமரிப்பு வசதியை வழங்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த 55 மில்லியன் பவுண்டுகள் முற்றிலும் புதிய நிதியொதுக்கீடு என்றும், இது எதிர்வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ள அரசாங்கத்தின் முதலாவது ‘துணை வரவுசெலவுத் திட்டத்தில்’ சேர்க்கப்படும் என்றும் பிளாய்ட் கிம்ரு கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.














