ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெப்ரி டொனால்ட்சன் (Sir Jeffrey Donaldson) மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கின் இறுதி வாதங்கள் இன்று காலை நியூரி கிரவுன் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், வட அயர்லாந்து அரசியலின் தலைவர்களில் ஒருவருமான 63 வயதுடைய ஜெப்ரி டொனால்ட்சன், தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்:
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரு சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு உட்பட மொத்தம் 18 பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமையுடன் பிரதிவாதி தரப்பு தங்களது சாட்சியங்கள் மற்றும் வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி, இன்று முதலாவதாக அரசாங்கத் தரப்பு (Prosecution) சட்டத்தரணிகள் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜெப்ரி மற்றும் லேடி எலினோர் டொனால்ட்சன் ஆகியோரின் சார்பில் ஆஜராகும் பாதுகாப்புத் தரப்புச் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில் , இவ்வார இறுதிக்குள் இந்த வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.














