வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட, 161 இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இந்த விபரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் தங்க ஆபரணத் தொகுதி தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை அளவீடு செய்து முடிப்பதற்குச் சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க ஆபரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் முகாம்கள் மற்றும் சட்டவிரோத வங்கிகளிலிருந்து இவை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















