கியூபப் புரட்சியின் நாயகனாகத் தனது நாட்டில் போற்றப்பட்டவரும், ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆரம்பகாலத் துணைகளில் ஒருவருமான ராமிரோ வால்டெஸ் (Ramiro Valdes) தனது 94 ஆவது வயதில் காலமானார் என்று ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கானல் ஞாயிற்றுக்கிழமையன்று (21) சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இறப்புக்கான காரணத்தை ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
1959-இல் காஸ்ட்ரோவின் கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக உயர்மட்ட அரசு அதிகாரியாகத் திகழ்ந்த வால்டெஸ், “குடியரசின் நாயகன்” மற்றும் “புரட்சியின் தளபதி” ஆகிய கௌரவப் பட்டங்களை வகித்ததோடு, 2019 ஆம் ஆண்டு வரை ஆளும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த அரசியல் பணியகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
1932 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி பிறந்த வால்டெஸ், ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசாங்கத்திற்கு எதிரான 1953 ஆம் ஆண்டு கிளர்ச்சியைத் தொடங்கிவைத்த ‘மொன்காடா’ இராணுவ முகாம் மீதான தாக்குதலின்போது, ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடியபோது அவருக்கு வயது வெறும் 21 தான்.
காஸ்ட்ரோவுடன் மெக்சிகோவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த அவர், 1956-இல் ‘கிரான்மா’ (Granma) என்ற படகில் கியூபாவிற்குச் சென்று கிளர்ச்சியை மீண்டும் தொடங்கிய 82 பேரில் ஒருவராகவும், அதில் உயிர் பிழைத்த வெறும் 12 பேரில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
உயிர் பிழைத்த அந்த 12 பேரில், 2016-இல் காலமான காஸ்ட்ரோ, அவரது இளைய சகோதரரும் பின்னர் ஜனாதிபதியாகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்ற ரவுல் காஸ்ட்ரோ, மற்றும் பொலிவியாவில் கிளர்ச்சியைத் தொடங்க முயன்றபோது 1967-இல் சுட்டுக் கொல்லப்பட்ட அர்ஜென்டினா புரட்சியாளர் எர்னஸ்டோ ‘சே’ குவேரா ஆகியோரும் அடங்குவர்.
வால்டெஸ் கிழக்குக் கியூபாவின் சியரா மேஸ்ட்ரா மலைப்பகுதிகளில் காஸ்ட்ரோ சகோதரர்களுடன் இணைந்தார்; அங்கு அவர் குவேவாராவின் துணைத் தளபதியாகப் பணியாற்றினார்.
1959-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் திகதி பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய இறுதிக்கட்ட நாட்களில் நடைபெற்ற தீர்க்கமான ‘சாண்டா கிளாரா’ போரில், அவர் குவேவாவுடன் இணைந்து போரிட்டார்.
பின்னர், ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கினார்.
காஸ்ட்ரோ மற்றும் குவேவாராவிடம் காணப்பட்ட ஈர்க்கும் ஆளுமைப் பண்பு வால்டெஸிடமும் இருந்தது; அவர்களைப் போலவே அவரும் அதிகார மையங்களில் ஆலிவ்-பச்சை நிற இராணுவச் சீருடையை அணிந்து வந்தார்.
புரட்சிக் காலத்தில் தான் வளர்க்கத் தொடங்கிய ‘லியோன் ட்ராட்ஸ்கி’ பாணியிலான தாடியை அவர் தனது வாழ்நாள் இறுதிவரை பராமரித்து வந்தார்.
உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்த அவர், தனது 80-களின் பிற்பகுதி வரையிலும் உடற்பயிற்சி வழக்கத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
காலப்போக்கில் அவர் வகித்த பதவிகளில் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர், தகவல் மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியவை அடங்கும்.
















