தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகே தம்பலகாமம் பொலிஸார் நேற்று (26) பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தம்புள்ளையிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன் ஒன்றையும், அதனைப் பின்தொடர்ந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்றையும் மறித்து சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையின்போது வேனின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
மேலும் வேனில் பயணித்த நான்கு மற்றும் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு என மொத்தம் 6 பேர், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்ட வேன், முச்சக்கரவண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளும் இன்று (27) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













