இன்று காலை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார, வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கை மற்றும் முதற்கட்ட விபரங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான், இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதி ஆளணிச் செலவீனத்தின் கீழுள்ள நிதியை குற்றவியல் மோசடியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்; கைது செய்யப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுகீஸ்வர பண்டார பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றி அரசாங்கத்திடமிருந்து இரண்டு சம்பளங்களைப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கான சம்பளத்திற்கு மேலதிகமாக சுகீஸ்வர பண்டார திட்டப் பணிப்பாளராகவும் சம்பளம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பாக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள சுகீஸ்வர பண்டார இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் .
















