பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்புகளை உருவாக்கி, இணையத்தின் மூலம் வணிகம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது, இணைய வணிக வாய்ப்பு மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மொத்தம் ரூ. 4,386,219 பணத்தை மோசடி செய்து, அதில் ரூ. 5 லட்சம் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் 2026.07.02 அன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயது நிரம்பிய பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.












