கடந்த 12 நாட்களில் 200க்கும் மேற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் போது லண்டன், தென்கிழக்கு அல்லது கிழக்கு இங்கிலாந்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால், அங்கு நிலவும் வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலைகள் காரணமாக அது மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மிட்லாண்ட்ஸ், லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கி வகையில் ஓரஞ்சு நிற வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகமையால் (UKHSA) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று முதல் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம், குறிப்பாக முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மொத்தம் 706 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில், ஜூலை 16 முதல் 28 வரையிலான பதினைந்து நாட்களுக்கும் குறைவான காலத்தில் 208 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்புத் தலைவர்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.













