பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
அண்மையில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, ஃபிளெமிங் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியிலிருந்தும், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் விளையாடும் அதன் துணை அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாடும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் பயிற்சியாளர் பதவியிலிருந்தும் விலகினார்.
‘தி கார்டியன்’ (The Guardian) இதழின் செய்திப்படி, கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற நேர்காணல் சுற்றுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) கவனத்தை ஃப்ளெமிங் ஈர்த்துள்ளார்.
53 வயதான இவரிடம் பயிற்சியாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், இங்கிலாந்தின் ‘வெள்ளைப் பந்து’ (white-ball) அணிகளின் பொறுப்பில் உள்ளவரும், தனது முன்னோடியும், சக நாட்டவரும், முன்னாள் அணித்தோழருமான பிரெண்டன் மெக்கல்லமுடன் இவர் இணைவார்.
எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கப் சுற்றுப்பயணத்தின்போது ஃப்ளெமிங் அணியுடன் இருக்கக்கூடும் என்றாலும், ஆகஸ்ட் 19-ஆம் திகதி தொடங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, இடைக்காலப் பயிற்சியாளராக மார்கஸ் ட்ரெஸ்கோதிக் அணியின் பொறுப்பை ஏற்கக்கூடும் என்று ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
2008-இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், எம்.எஸ். தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் ஒரு வீரராக ஃப்ளெமிங் இணைந்தார்.
அந்த சீசனில் சிஎஸ்கே அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
CSK அணி வென்ற ஐந்து ஐபிஎல் கிண்ணங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்கள் என அனைத்தையும் அவர் தனது தலைமையின் கீழ் பெற்றுத் தந்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்த பயிற்சியாளராக அவர் திகழ்கிறார்.















