மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) மாலை கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்றும் சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டார்.
உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரளை, பஸ்பாகே கோரளை மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சம்பத் கொட்டுவேகொட மேலும் தெரிவித்தார்.
தற்போது குறித்த பகுதிகளுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறியத்தரப்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவசர நிலைகள் ஏற்பட்டின், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு சம்பத் கொட்டுவேகொட, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.













