பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, மனிதக் கடத்தல்காரர்கள் புதிய மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, கடத்தல்காரர்கள் ஒரு நபருக்கு 1,000 பவுண்டுகளை பெற்றுக்கொண்டு புலம்பெயர்ந்தோரை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐரோப்பியப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மேலும், கூடுதலாக 500 பவுண்டுகளை பெற்றுக்கொண்டு அவர்களை ஸ்பெயினுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு, சமீபத்திய குடியேற்றக் கொள்கைகள் காரணமாக, சட்டவிரோதக் குடியேறிகள் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகின்றன.
ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுக்கள், சமூக ஊடகத் தளங்களில் தங்களின் பயணத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த விளம்பரங்கள், மக்களை ஈர்ப்பதற்காக பெர்லின், பாரிஸ், ரோம் மற்றும் பிற ஐரோப்பிய நகரங்களின் கவர்ச்சிகரமான படங்களைப் பயன்படுத்துகின்றன.
இங்கிலாந்தில் விசா காலம் முடிவடைந்தவர்கள் அல்லது குடியேற்ற நிலை நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்களைக் கடத்தல்காரர்கள் குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2022ம் ஆண்டு முதல், சித்திரவதை மற்றும் ஆள் கடத்தலில் இருந்து தப்பியவர்கள் உட்பட 1,100க்கும் மேற்பட்டோர், இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைத் தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய படகுகள் மூலமாகவோ அல்லது லொரிகள் போன்ற பிற சட்டவிரோத வழிகள் மூலமாகவோ ஐக்கிய இராச்சியத்திற்கு வரத் திட்டமிடுபவர்களைத் தடுக்கும் நோக்கில், உள்துறை அமைச்சகம் 2022ம் ஆண்டில் சட்டவிரோத வருகை என்ற குற்றத்தை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
















