மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) முச்சக்கர வண்டி ஒன்றும் காரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பியகமவிலிருந்து தெல்கொடாவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறம் திரும்ப முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் பலத்த காயமடைந்து உடுபில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களுள் முச்சக்கர வண்டியின் சாரதியும் பெண்ணொருவரும் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தெல்கொடவைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் மற்றும் சியம்பலபேயைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது ஏழு வயது மகள் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
காரில் பயணித்த மற்றொரு சிறுமியும் காயமடைந்து ரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மீகஹவத்த பொலிஸார் இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












