பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் பயன்படுத்தப்படும் தரவுத்தள அமைப்பில் ஏற்பட்ட கணினித் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள ‘சுஹுருபாய’ (Suhurupaya) கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள பிரிவின் ஊடாகவே இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், அறிக்கைகளைச் சரிபார்த்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய பணிகள் அனைத்தும் தானியங்கித் தரவுத்தள அமைப்பின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று (20) பிற்பகல் 12:50 மணி முதல் இந்த அமைப்பு செயலிழந்து காணப்படுகிறது.
இது குறித்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைக்கு (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அமைப்பை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே, தரவுத்தள அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, குறித்த சான்றிதழக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும்.
அமைப்பு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.













