ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நாட்டின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிச் சரியாக 20 நாட்களில் அருட்தந்தை ஜிம் பிரவுணின் 20ஆவது நினைவுநாள் வந்தது.
கத்தோலிக்கத் திருச்சபையின் மதகுரு ஆகிய அருட்தந்தை ஜிம் பிரவுண் 20 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்டார்.அவர் காணாமல் ஆக்கப்பட்ட நாளை கடந்த செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டியில் மக்கள் நினைவு கூர்ந்தார்கள்.திருச்சபையின் மதகுருக்களும்,பங்கு மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து ஓர் அமைதிப்பேரணியை நடத்தினார்கள்.
ஜிம் பிரவுண் காணாமல் ஆக்கப்பட்டு 20ஆண்டுகள் கழிந்துவிட்டன.புனித சம்பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அதிபராகிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் காணாமல் ஆக்கப்பட்டு,அதுவும் சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்டு 17 ஆண்டுகள் கழிந்து விட்டன.இரண்டு மத குருக்களுக்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை.
ஆனால் 7ஆண்டுகளுக்கு முன் வெடித்த ஈஸ்டர் குண்டுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல ஒரு முன்னாள் போலீஸ் மா அதிபருக்கும் ஒரு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் மரண தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.நாட்டின் முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர் விசாரணையின் கீழ் இருக்கிறார்.
அதாவது 7ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அரசாங்கம் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளைத் தேடி விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன் அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்னும் 20 ஆண்டுகளுக்கு முன்னும் காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு கத்தோலிக்க மத குருக்களும் உட்பட ஏனைய மத குருக்களுக்கு இன்றுவரை நீதி இல்லை.
2009 மே மாதமும் அதற்கு முன்னரும் நடந்தது தமிழ் இன அழிப்பு என்று கத்தோலிக்கத் திருச்சபையின் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே மாதம் தெரிவித்தார்.அது தவறு என்றும் அது அருட்தந்தை ஜீவந்த பீரிசின் தனிப்பட்ட கருத்து என்றும் கொழும்பில் உள்ள பேராயரின் இல்லம் மறுத்தது.2009 வரையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போரானது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று பேராயர் இல்லத்தின் ஊடகத்துறை சார்ந்த ஒரு அருட்தந்தை தெரிவித்திருந்தார்.ஆயின்,பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்தான் அருட்தந்தை ஜிம் பிறவுணும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பும் காணாமல் ஆக்கப்பட்டார்களா?
ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்டத்தை சேர்ந்த குருவானவர்கள் அருட்தந்தையர்களான ஜிம் பிரவுண்,பிரான்சிஸ் ஜோசப் உட்பட எல்லா காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமாக குரல் எழுப்புகிறார்கள்.கடந்த மாத இறுதியில் செம்மணியில்,யாழ்.மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க தந்தையர்களும் அருட் சகோதரிகளும் ஓர் அமைதிப் பேரணியை நடத்தினார்கள்.அங்கேயும் அவர்கள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை வேண்டாம்,அனைத்துலக விசாரணைப் பொறிமுறைதான் வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்கள்.
அண்மை வாரங்களாக கத்தோலிக்கத் திருச்சபையின் தமிழ் மறை மாவட்ட மதகுருக்கள் ஒப்பீட்டளவில் தீவிரமாக இன அழிப்புக்கு நீதி கேட்டு,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு,மனிதப் புதை குழிகளுக்கு நீதி கேட்டு அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.யாழ் மறை மாவட்டத்திற்கு ஒரு புதிய ஆயர் நியமிக்கப்பட்டிருக்கும் பின்னணியில்,அந்த ஆயர் தமிழ் பகுதிகளில் ஏற்கனவே இடம்பெற்ற நீதிக்கான போராட்டங்களில் ஈடுபடாதவர் என்பதனால் கொழும்பில் உள்ள பேராயரின் அரசியலை அவர் பின்தொடரக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில்,அவருடைய நியமனம் தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த அளவில் சமூகஊடக வலைத் தலங்களில் பகிரப்பட்ட ஒரு பின்னணியில்,யாழ் கத்தோலிக்க மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையரும் அருட் சகோதரிகளும் அதிகமாக நீதிக்கான போராட்டங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு அமைதிப் பேரணிகளில் ஈடுபடும் கத்தோலிக்க மத குருக்களும் அருட் சகோதரிகளும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரிப்பதோடு,சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக் கேட்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்கும் பேராயர் மல்கம் ரஞ்சித், தமிழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மத குருக்களின் அருட் சகோதரிகளின் மேற்படி கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா?
இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து 17ஆம் தேதி வரையிலும்,செம்மணியில் இடம்பெற்ற “நீதியின் ஓலம்-2” என்ற போராட்டத்தின் போதும் அனைத்துலக விசாரணைதான் வேண்டும் என்ற கோரிக்கைதான் முன்வைக்கப்பட்டது. “தாயகச் செயலணி”என்ற அமைப்பு அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திருந்தது.கடந்த ஆண்டும் இதே அமைப்பு “நீதியின் ஓலம்-1” என்ற போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மதகுருக்கள்,அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள்.குறிப்பாக தென்னிலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டங்களில் முக்கியஸ்தராக இருந்தவரும் இங்கு இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிடப்பட்டவருமாகிய அருட்தந்தை ஜீவந்த பீரிசும் அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் காணப்பட்டார். காவி உடை தரித்த ஒருவர் அந்தப் போராட்டத்தில் பிரச்சினையை ஏற்படுத்த முற்பட்டார்.எனினும் போராட்டம் தொடர்ந்தது.
செம்மணியில் மூன்றாம் கட்ட அகழ்வாராட்சியில் இதுவரையிலும் 582 எலும்புக்கூடுகள் வெளிவந்து விட்டன.அண்மையில் அந்தப் பகுதியில் எழுமாறாக ஓரிடத்தைத் தெரிவுசெய்து அங்கே கிண்டியபொழுது அங்கேயும் எலும்புக்கூடுகள் வெளிவந்தன.இது 28ஆண்டுகளுக்கு முன்பு கிரிசாந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ கடந்த சுமார் 28ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாகக் கூறிவருவதை ஞாபகப்படுத்துகிறது.
சோமரத்ன ராஜபக்ச கூறுகிறார்,செம்மணியும் உட்பட அந்தப் பிரதேசத்தில் வேறு பல இடங்களில் புதைகுழிகள் உண்டு என்று.ஆனால் அவர் 28 ஆண்டுகளுக்கு முன் கூறிய தொகையைவிட அதிக தொகை எலும்புக்கூடுகள் இப்பொழுது வெளிப்பட்டிருக்கின்றன.மேலும் அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு உத்தரவிட்ட சில மேலதிகாரிகளையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.அந்த அதிகாரிகளில் எவரும் இதுவரை விசாரிக்கப்படவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலான காலப்பகுதியில் அவர்களில் சிலர் பதவி உயர்வுகளைப் பெற்று விட்டார்கள்;சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்டார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தை அவருடைய மனைவி புதுப்பித்தார்.தன் கணவருக்கு நீதி வேண்டும் என்றும்,அதற்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்றும் அவர் குரல் எழுப்பியுள்ளார்.ஆனால் அரசாங்கம் அவருடைய வேண்டுகோளுக்கு இதுவரையிலும் செவி சாய்க்கவில்லை.
செம்மணிப் புதை குழி தொடர்பான நடவடிக்கைகளில் “அகழ்வாராய்ச்சி என்பது குற்றவியல் விசாரணை அல்ல” என்று அண்மையில் கூறியுள்ளார் ஜோஹன் சூஃபி.இவர் யார் என்றால்,கடந்த சில ஆண்டுகளாக ஐநாவில் இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகும்.”இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்”-Sri Lanka Accountability Project-(OSLAP) என்று அழைக்கப்படுகின்ற இந்த அலுவலகம் 2022ஆம் ஆண்டிலிருந்து ஐநா.மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கும் குற்றவியல் விசாரணைக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு என்று சூஃபி கூறுகிறார்.இவ்விரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்.”அகழ்வாராய்ச்சி என்பது நிலத்திலிருந்து உடல்களை மீட்டெடுத்து, அவை கண்ணியமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதாகும்.ஆனால்,குற்றவியல் விசாரணை என்பது என்ன நடந்தது,யார் பொறுப்பு,மற்றும் குற்றங்கள் எப்போது இழைக்கப்பட்டன என்பதைத் தீர்மானிப்பதாகும்.” என்றும் ஜோஹன் சூஃபி கூறியுள்ளார்.அவர் கூறுவது போல குற்ற விசாரணைகளை அரசாங்கம் எப்பொழுது தொடங்கும்?
குற்ற விசாரணைகள் எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டுபிடிப்பதில் இருந்து தொடங்கும்.அரசாங்கம் அவ்வாறு எலும்புக்கூடுகளின் காலங்களைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான தடையவியல் ஆய்வு மையங்களை நாட்டில் உருவாக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவற்றில் ஒன்று யாழ்.மருத்துவ பீடத்தில் அமையும் என்றும் அறியமுடிகிறது.
எலும்புக்கூடுகளின் காலத்தைக் கணித்தால்தான் அக்காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டதாகச் சந்தேகப்படுகின்றவர்களின் உறவினர்களுடைய மரபணு மாதிரிகளையும் எலும்புக் கூடுகளின் மரபணு மாதிரிகளையும் ஒப்பிடுவது தொடர்பான அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.
ஆனால் நீதி அமைச்சர் அண்மையில் செம்மணிக்கு வருகை தந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் என்ன சொன்னார்? மரபணு மாதிரிகளை ஒப்பு நோக்குவது என்பது இறுதிக்கட்டம் என்று.அந்த இறுதிக்கட்டம் எப்பொழுது வரும்?
அண்மையில் எழுமாறாக தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இடத்தில் அகழ்ந்து பார்த்த போது அங்கேயும் எலும்புக்கூடுகள் கிடைத்தன.ஆயின் புதிதுபுதிதாக இடங்கள் அடையாளம் காணப்பட்டால்,அகழ்வுப் பணிகள் எப்பொழுது முடியும்?அடுத்த கட்ட விசாரணை எப்பொழுது தொடங்கும்?
அரசாங்கம் செம்மணி விடயத்தை நாட்டின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை அனைத்துலக அளவில் நிரூபிப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது.அதை நோக்கியே கடந்த 23 மாதங்களாக உழைக்கின்றது.கடந்த ஆண்டு ஐநாவில் உரை நிகழ்த்திய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து விட்டார்.எனவே அவர்கள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை எப்படிப் பலப்படுத்துவது என்றுதான் சிந்தித்து உழைப்பார்கள்.
இது ஒரு விதத்தில் இரண்டு பக்கமும் கூரான கத்தியைப் போன்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்தப்போய் அதன் விளைவாக எதிர்காலத்தில் தன்னுடைய தேர்தல் வெற்றிகளை கேள்விக்கு உள்ளாக்க அரசாங்கம் விரும்பாது.ஏனென்றால் இலங்கைத்தீவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பது என்பது அதன் பிரயோக வார்த்தைகளில்,குறிப்பாக தமிழ்நோக்கு நிலையில்,போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் படைத் தரப்பை விசாரிப்பதும் தண்டிப்பதும்தான்.அப்படி விசாரித்து படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால்,அது எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும்.இனவாதிகள் அதனை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பிப் பிடிப்பார்கள்.யுத்த வெற்றியை இந்த அரசாங்கம் காட்டிக் கொடுத்துவிட்டது என்று கொந்தளிப்பார்கள்.
எனவே இலங்கைத்தீவில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் நம்பகத்தன்மையை இன முரண்பாடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிரூபிப்பது,அரசாங்கத்தைப் பொறுத்தவரை தனக்குத்தானே சூனியம் வைத்ததாக அமையலாம்.மாறாக எதிர்க்கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அதாவது எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டக்கூடிய விடயங்களில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத் தன்மையை நிரூபிப்பது நீண்ட எதிர்காலத்தில் அரசாங்கத்திற்குப் பாதுகாப்பானது.
அதன் மூலம் எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்தலாம்.எதிர்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளலாம்.அது உள்நாட்டில் அரசாங்கத்தைப் பலப்படுத்த உதவும். எதிர்கால தேர்தல் வெற்றிகளையும் அது பாதுகாக்கும்.
எனவே உள்நாட்டு விசாரணைப் பொறி முறையின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவது என்பது அரசாங்கத்தின் நோக்குநிலையில்,எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதுதான்.எதிர்க் கட்சிகளை பலவீனப்படுத்துவதுதான்.தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அல்ல.பொறுப்புக்கூறுவது அல்ல.அதாவது ஜிம் பிரவுண் அடிகளாருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அல்ல.













