ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இன்று அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதுடன்இ போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் வானிலை மையத்தின் தகவல்படி இந்த பூமியதிர்ச்சி 5.9 ரிச்டர் அளவாகப் பதிவாகியுள்ளதுடன் இதன் மையம் இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் 68 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 5.8 ரிச்டராகக் கணித்துள்ளது.
பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானிய பூமியதிர்ச்சி தீவிர அளவுகோலில் இது lower5 ஆகப் பதிவாகியுள்ளது.
பூமியதிர்ச்சி அதிர்வால் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த மக்கள் பயத்தில் ஓட முற்பட்டபோது விழுந்தும் கதவுகள் மற்றும் தளபாடங்களில் மோதியுமே பெரும்பாலோர் காயமடைந்துள்ளனர். யோகோஹாமாவில் 80 வயதுப் பெண் ஒருவர் படுக்கையிலிருந்து விழுந்து இடுப்பில் பலத்த காயமடைந்துள்ளார்.
டோக்கியோவின் கோட்டோ பகுதியில் நிலத்தடி நன்னீர் குழாய் ஒன்று உடைந்ததால் வீதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் அது சரிசெய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள சுமார் 460 வீடுகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ மற்றும் நரிதா விமான நிலையத்தை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டோ அல்லது குறைந்த வேகத்திலோ இயக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஷிங்கன்சென் அதிவேக புல்லட் ரயில்கள் வழக்கம்போல் இயங்கியுள்ளன.
இபராக்கியில் உள்ள தோக்காய் எண். 2 அணுமின் நிலையம் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களில் எந்தவித அசம்பாவிதங்களோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு மண்சரிவ அபாயம் மற்றும் தொடர் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

















