ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘பொக்ஹோ சமன்’ (Backhoe Saman) என்பவரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பாகத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 19-ஆம் திகதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனியப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்து, மித்தெனியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மித்தெனிய பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், ‘பொக்ஹோ சமன்’ என்று அழைக்கப்படுபவரின் தாயார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, சந்தேகநபர் உடந்தையாக இருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்படி, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (23) வலஸ்முல்ல நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேகநபரொருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு சந்தேகநபரை தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று கைது செய்தனர்.
அங்கு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மிதெனிய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மிதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













