நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் இதுவரை நாடு முழுவதிலும் இருந்து 94,292 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 29,962 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த சில நாட்களில் 8,956 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் பதிவான மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமானோர் (49,901 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், தென் மாகாணத்தில் 13,779 பேருக்கும், மத்திய மாகாணத்தில் 8,551 பேருக்கும் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் பார்க்கும் போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 20,081 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18,709 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,846 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,099 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட 76 பகுதிகள் அதி ஆபத்து மண்டலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.














