மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ளதால், அதற்குரிய வழக்குச் சான்றுகளைத் (Charge Sheet) தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே இவ்வழக்கை எதிர்காலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
‘மக நெகும’ நகர மற்றும் கிராமப்புற வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மொரட்டுவ மாநகர சபைக்குட்பட்ட 112 அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களில் நிதி விதிமுறைகளை மீறி, தனது நண்பர்களுக்கு நிதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சமன் லால் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிரான இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.













