2026.09.03 அன்று இடம்பெறவுள்ள இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026” செப்டெம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸாருக்கும் இளைஞர் சமூகத்திற்கும் இடையில் நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துதல், அத்துடன் இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து விலக்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை இச்சைக்கிள் சவாரியின் பிரதான நோக்கங்களாகும்.
போட்டியாளர்களுக்காக மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இச்சைக்கிள் சவாரி, விளையாட்டு அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ், தகைமை பெற்ற சைக்கிள் போட்டி நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு நடத்தப்படும்.
கட்டம் 01 – கொழும்பிலிருந்து தம்புள்ளை வரை
2026.09.01 அன்று காலை 07.30 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் ஆரம்பமாகும் இப்போட்டி, கொழும்பு, பேலியகொடை, நிட்டம்புவ, வரக்காபொல, குருணாகல், மெல்சிறிபுர ஆகிய பகுதிகள் ஊடாக தம்புள்ளை நகரை சென்றடையும்.
மதிப்பிடப்பட்ட தூரம் – 145 கிலோமீற்றர்.
இப்போட்டி நிறைவடையும் தம்புள்ளை நகரில், போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.
கட்டம் 02 – தம்புள்ளையிலிருந்து அனுராதபுரம் ஊடாக புத்தளம் வரை
2026.09.02 அன்று காலை 07.30 மணிக்கு தம்புள்ளை நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பமாகும் இப்போட்டி, மரதன்கடவல, திரப்பனை, அனுராதபுரம், நொச்சியாகம, கலாஓயா ஆகிய பகுதிகள் ஊடாக புத்தளம் நகரை சென்றடையும்.
மதிப்பிடப்பட்ட தூரம் – 140 கிலோமீற்றர்.
இப்போட்டி நிறைவடையும் புத்தளம் நகரில், போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.
கட்டம் 03 – புத்தளத்திலிருந்து பம்பலப்பிட்டி பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகம் வரை
2026.09.03 அன்று காலை 08.00 மணிக்கு புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகும் இப்போட்டி, சிலாபம், மாரவில, நீர்கொழும்பு, ஜா-எல, கொழும்பு, பேலியகொடை, ஒருகொடவத்த, தெமட்டகொடை, பொரளை, BMICH ஆகிய பகுதிகள் ஊடாக பம்பலப்பிட்டி பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தை சென்றடையும்.
மதிப்பிடப்பட்ட தூரம் – 130 கிலோமீற்றர்.
இப்போட்டி நிறைவடையும் பம்பலப்பிட்டி பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில், போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு பொலிஸ் மா அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.
போட்டியில் தெரிவுசெய்யப்படவுள்ள வெற்றியாளர்கள்
- ஒட்டுமொத்த போட்டியிலும் குறைந்த நேரத்தில் போட்டியை நிறைவு செய்யும் சாம்பியன்
- ஸ்பிரிண்ட் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் சாம்பியன்
- சிறந்த இளம் வீரர் (White / Best Young Rider) – 23 வயதுக்குக் குறைந்த வீரர்களில் ஒட்டுமொத்த போட்டியிலும் சிறந்த நேரத்தைப் பதிவு செய்யும் வீரர்
ஆகியோர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
ஒட்டுமொத்த போட்டி நிறைவடைந்த பின்னர், வெற்றியாளர்கள் உள்ளிட்ட போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் பணப்பரிசுகள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு
பொலிஸ் பரிசோதகர் பிரபாத் விஜேசிறி
(முகாமையாளர் – பொலிஸ் சைக்கிள் சவாரி)
071 921 8626
சைக்கிள் சவாரி நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் பயணிக்கும் பாதைகளை உள்ளடக்கும் வகையில், செப்டெம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமொன்று இலங்கை பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போட்டியாளர்கள் எவ்வித இடையூறுமின்றி போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.















