முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) திங்களன்று சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஸ்பானிஷ் மொழியில் கையால் எழுதப்பட்ட குறிப்பு அடங்கிய ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் 39 வயதான அவர், ஆர்ஜென்டினா தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தினார்.
2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பின்னர் அவர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகே தனது ஓய்வு குறித்த அறிவிப்பைத் தயாரிக்கத் தொடங்கியதாகவும், இம்மாதத் தொடக்கத்தில் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஓய்வு முடிவில் இன்னும் உறுதியானதாகவும் எட்டு முறை ‘பாலன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வென்ற மெஸ்ஸி தெரிவித்தார்.
(மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி, மத்திய ஆர்ஜென்டினாவின் ரோசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி 68 ஆவது வயதில் காலமானார்)
ஓய்வு குறித்த அறிவிப்பில், இனி அதிக நேரம் எதுவும் இல்லை; பல அத்தியாயங்கள் முடிவை நோக்கிச் செல்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தான் எப்போதும் அணிக்காக தனது முழு அர்ப்பணிப்பையும் வழங்கியதாகவும், தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை எப்போதும் பெருமையாகவும் அன்பாகவும் கருதியதாகவும் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் விலகுவது சரியான முடிவு என்று நம்பினாலும், அந்தத் தீர்மானம் இன்னும் தன்னை ஆழமாக வேதனைப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்ததுடன், தன்னை ஆர்ஜென்டினராகப் பிறக்க வைத்த இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆறு உலகக் கிண்ணங்களில் விளையாடிய மெஸ்ஸி, 2022- இல் கட்டாரில் நடைபெற்ற தொடரை வென்றார்.
அத்துடன் 2026- இல் ஆர்ஜென்டினாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர், ஸ்பெயினிடம் தோல்வியடைந்தார்.
ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, தனது நாட்டின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார்.
மெஸ்ஸி தேசிய அணிக்காக 207 போட்டிகளில் 125 கோல்களை அடித்துள்ளார்.
தென் அமெரிக்க கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் இவரே.
2022- இல் அவர் ஆர்ஜென்டினாவை உலகக் கிண்ண வெற்றிக்கு வழிநடத்தியபோது, அது 36 ஆண்டுகளில் அந்நாட்டின் முதல் வெற்றியாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது வெற்றியாகவும் அமைந்தது.
அதற்கு முன்பு, 2021 கோபா அமெரிக்காவை வென்று, பின்னர் 2024- இல் மீண்டும் வென்று, ஆர்ஜென்டினாவின் 28 ஆண்டுகால கிண்ண வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றினார்.
ஆர்ஜென்டினா அணியை வழிநடத்தி தொடர்ந்து மூன்று இறுதிப் போட்டிகளில் பங்கேற்றும் அவற்றில் எதிலும் வெற்றிபெற முடியாமல் போன நிலையில், அவர் 2016-இல் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
எனினும், சிறிது காலத்திலேயே அந்த முடிவை மாற்றிக்கொண்ட மெஸ்ஸி, பின்னர் அந்த அணிக்கு இரண்டு கோபா அமெரிக்கா மற்றும் ஒரு உலகக் கிண்ண வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

ஆர்ஜென்டினா அணிக்காக விளையாடுவதை நிறுத்த அவர் முடிவெடுத்திருந்தாலும், தனது MLS அணியான ‘இன்டர் மியாமி சிஎஃப்’ (Inter Miami CF) உடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸிக்கு இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் எஞ்சியுள்ளன.
அவர் 2028 டிசம்பர் மாதம் வரை அந்த அணிக்காக விளையாடுவார்.
தற்போதைய நிலவரப்படி, ‘போஸ்ட்-சீசன்’ (post-season) போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மெஸ்ஸிக்கு இன்னும் 13 ஆட்டங்கள் எஞ்சியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











