பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த விசாரணைக்கு அமைய சில குறைபாடுகளும் கவனயீனங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் அது தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த உள்வாரியான விசாரணையானது, போதைப்பொருட்களுடன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட இரண்டு கொள்கலன்கள் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேற்கொள்ளும் விசாரணைக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அந்த முக்கிய விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.















