பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த மனிதாபிமானக் கவலைகளை எழுப்பி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஏழு முன்னாள் தலைவர்கள் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இயன் சாப்பல், பெலிண்டா கிளார்க், கிம் ஹியூஸ், மார்க் டெய்லர் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள், தாங்கள் தூதர்களாகவோ அல்லது அரசியல் பிரமுகர்களாகவோ அல்லாமல் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த முன்னாள் தலைவர்களாகவே இதை எழுதுவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், இம்ரான் கான் மீதான சட்டரீதியான அல்லது அரசியல் ரீதியான விவகாரத்தில் தாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பதையும் அவர்கள் அக் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஆதரவாக, மிகவும் மதிக்கப்படும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் குழுவொன்று விடுத்துள்ள மிக அண்மைய வேண்டுகோள் இதுவாகும்.
ஆகஸ்ட் 23 அன்று, உலகம் முழுவதிலுமிருந்து இருபத்திரண்டு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு ஒரு கடிதம் எழுதினர்.
அதில், இம்ரான் கானுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையானது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அமையவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு முன்னதாக, பெப்ரவரி 14 முன்னாள் சர்வதேச அணித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான்களான ஜாவேத் மியாண்டாட், வசிம் அக்ரம் மற்றும் மொயின் கான் ஆகியோரும் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.
அதேவேளையில், தற்போதைய அவுஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸும் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.














