இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் டி20 துடுப்பாட்ட வரிசையில் அடிப்படை மாற்றங்கள் அவசியம் என முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
மூன்றாவது டி20 போட்டிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், உலகின் முன்னணி இரண்டு அல்லது மூன்று அணிகளுக்கும் ஏனைய அணிகளுக்கும் இடையில் கணிசமான இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னணி அணிகளை எதிர்கொள்ள இலங்கை அணி இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டியுள்ளதாக தெரிவித்த சங்கக்கார, டி20 கிரிக்கெட்டில் அணியின் மிகப்பெரிய சவாலாக துடுப்பாட்டமே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஆரம்ப ஓவர்களில் கிடைக்கும் வேகத்தை இடைநிலை ஓவர்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை நீண்டகால பலவீனமாக இருந்து வருவதாக அவர் கூறினார்.
“பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வலுவான முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியை எவ்வாறு உருவாக்குவது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது” என சங்கக்கார தெரிவித்தார்.
தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பவர்பிளே ஆட்டம் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இடைநிலை ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கும் பிரச்சினை நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
குசல் மெண்டிஸ் மீண்டும் அணிக்குத் திரும்பும் நிலையில், கமில் மிஷார மற்றும் லஹிரு உதாரா ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்பது தெரிவுக்குழுவின் முக்கிய முடிவாக இருக்கும் என்றும் சங்கக்கார குறிப்பிட்டார்.
அதேவேளை, நடுவரிசையில் தசுன் ஷானக்கவின் அதிரடி துடுப்பாட்ட திறன் அணிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும், கமிந்து மெண்டிஸ் திறமையான வீரர் எனவும் அவர் பாராட்டினார்.
பந்துவீச்சுத் துறையில் இலங்கைக்கு போதுமான வலிமை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நவீன டி20 கிரிக்கெட்டின் தேவைகளுக்கு ஏற்ப துடுப்பாட்ட வீரர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதிலேயே தற்போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
வரவிருக்கும் ஒருநாள் சர்வதேச தொடரை முன்னிட்டு கருத்து வெளியிட்ட சங்கக்கார, டி20 தொடரில் கிடைத்த அனுபவங்களிலிருந்து இலங்கை அணி பாடம் கற்று, வெற்றியை நோக்கிய மனப்பாங்குடன் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அணித் தேர்வில் தொடர்ச்சியான கொள்கை, அனுபவம் வாய்ந்த வீரர்களின் மீது நம்பிக்கை மற்றும் தெளிவான திட்டமிடல் அவசியம் என அவர் தெரிவித்தார்.
“சரியான அணியைத் தேர்வு செய்து, வீரர்களுக்கு நம்பிக்கையளித்து, சிறந்த வீரர்களை ஆதரித்து, தொடர்ந்து ஒரே கொள்கையைப் பின்பற்றி அவர்களுக்கு சுதந்திரமாக விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும்” என சங்கக்கார கூறினார்.
இலங்கையின் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் அணியை மீளக் கட்டியெழுப்பும் பயணம் நீண்டகால முயற்சியாக இருக்கும் என்றாலும், அதற்கான அடித்தளங்களை உடனடியாக அமைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.















