ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிரீன்லாந்து, டென்மார்க் தலைவர்கள் செவ்வாயன்று (22) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை அதிகரிக்க அனுமதிப்பதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கனிவளம் நிறைந்த அந்தத் தீவு தொடர்பான பதட்டமான சூழலுக்குத் தீர்வு காணவும் கூடும்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ட்ரம்ப் கலந்துகொண்டபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் விடுத்திருந்த கோரிக்கையை இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றவில்லை.
இருப்பினும், அந்தப் பனி படர்ந்த பகுதியில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை அதிகரிப்பதை இந்த ஒப்பந்தம் முறைப்படுத்துகிறது.
கிரீன்லாந்து தலைவர்கள் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு எதிராக வாதிட்டதன் விளைவாகவே இந்த வழிமுறை உருவானது.
ஒப்பந்த விவரங்களின்படி, பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு கவசமாக கிரீன்லாந்தில் “கோல்டன் டோம்” (Golden Dome) பாதுகாப்பு அமைப்பை அமெரிக்காவால் நிறுவ முடியும்.
ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கான மிகக் குறுகிய வழித்தடம் இந்த ஆர்க்டிக் தீவின் வழியாகவே அமைகிறது.
அமெரிக்காவின் வடக்கே அமைந்துள்ள மிகத் தொலைதூர இராணுவத் தளமும் இங்குதான் உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் கூடியிருந்த உலகத் தலைவர்கள் மத்தியில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வுக்கு முன்னதாக ஆற்றிய உரையில், அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் அமெரிக்காவிற்கு “நிரந்தரக் கட்டுப்பாட்டை” இந்த ஒப்பந்தம் வழங்குவதாக டிரம்ப் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரைக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோருடன் இணைந்து முத்தரப்பு விழாவொன்றில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















